Tuesday 24 June 2008

ஓர் இரவு

ஐம்பதுகளில் வெளிவந்த, இதே தலைப்புக் கொண்ட புகழ்பெற்ற திரைப்படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எடுத்த எடுப்பிலேயே தெரிவித்து விடுகிறேன்...
(எனக்கு மிகவும் பிடித்த தேஷ் ராகத்தில் அமைந்த பாவலரின் "துன்பம் நேர்கையில்" பாடல் இந்தப் படத்தில் இடம் பெற்றதால் இந்தத் தலைப்பு என் நினைவுக்கு வந்தது )
பொதுவாக பிறந்தது முதல் நித்திரா தேவியின் நீங்காத அருள் பெற்றவள் நான்.
எந்த நிலைமையிலும் அசராது அசந்து தூங்கும் என் ஆற்றல் என்னை அறிந்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமானது.....
கால் நூற்றாண்டுக்கும் மேல் இப்படிப் பழகிய எனக்கு ஏனோ இந்திய மண்ணை விட்டுக் கிளம்பியதும் இன்சோம்னியா (insomnia) தொற்றிக் கொண்டது ....
என் தாய்த் திருநாட்டின் சத்தத்துக்கும் சந்தடிக்கும் பழகிய என் செவிகள் அமெரிக்க மண்ணின் அமைதியான சூழ்நிலைக்கு பழக மறுத்தன...
அதன் விளைவாய்ப் பல இரவுகள் உறக்கமின்றிப் புரளும் நிலை எனக்கும் வரும் என்று (கனவிலும் ! )நினைக்கவில்லை....
பல இரவுகளில் குறிப்பிடத்தக்க ஓர் இரவு சில நாட்களுக்கு முன்னாள்...
தலையணையுடன் முட்டி மோதியாவது தூங்கிவிடும் என்னை அன்று ஊழ்வினை உறக்கத்தின் (உறக்கமின்மையின் ?) வடிவில் உறுத்து வந்து ஊட்டியது...
பல முறை புரண்டு படுத்து , தலையணைகளை மாற்றி வைத்து, குளிர் சாதனத்தின் வெப்பத்தைக் கூட்டி, குறைத்து, இப்படி எனக்குத் தெரிந்த உத்திகள் அனைத்தையும் கையாண்டு பார்த்தும் பலன் பூஜியம்...
அடுத்த கட்டமாக பாய் சுருட்டிக்கொண்டு தரையிலும் படுத்துப் பார்த்தாகிவிட்டது...
அதிலும் பலனில்லாமல் போகவே யதோத்காரி பெருமாளைப் போல் சிறிது நேரத்திலேயே மீண்டும் பாய் சுருட்டிக்கொண்டு (யாரும் சொல்லாமலே !) கட்டிலுக்கே வந்து சேர்ந்தேன்...
இடைப்பட்ட நேரத்தில் "மெத்தென்று" இருப்பதால் தான் "மெத்தை" என்ற காரணப் பெயர் வந்ததோ என்ற அதி முக்கியமான ஆராய்ச்சியில் வேறு ஈடு பட்டேன்...
இத்தனையும் தாண்டி மணியைப் பார்த்தால் அதிகாலை மணி நாலரை...
சமீப காலத்தில் சூரிய உதயத்தைக் கண்டது அன்றாகத்தான் இருக்க வேண்டும்...
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணன் தோற்றும் எனக்கே தந்த பெருந்துயில் கொண்ட நான், இந்த மகத்தான சாதனை தந்த மகிழ்ச்சியில் சிறிது நேரத்திலயே உறங்கத்துவங்கினேன்....