Monday 14 July 2008

கச்சா எண்ணெயும், கத்தும் அமெரிக்கர்களும்

அமெரிக்கர்களைப் பொறுத்தவரை உலகம் நீரின்றி அமைந்தாலும் அமையும், ஆனால் காரின்றி அமையாது !
குடும்பத்துக்கு ஒரு கார் என்பதே நம் நாட்டில் பெரிய விஷயம். இங்கோ, நபருக்கு ஒரு கார் என்பது அவசியம், ஆடம்பரமல்ல ....


ஒரு குடும்பத்தில் பல கார்கள் இருப்பதாலும் ஒரு நாளில் பல மணி நேரங்களைக் கார் பிரயாணங்களில் செலவிடுவதாலும் வேறு எந்தப் பொருளின் விலை ஏற்றத்தையும் விட பெட்ரோல் விலை அமெரிக்கர்களை அச்சுறுத்துகிறது...

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இங்கு சமீபத்தில் பெட்ரோல் விலையை ஒரு காலன்(அளவு, எமன் அல்ல !) நான்கு டாலருக்கும் மேல் கொண்டு சென்றுள்ளது .
எங்கும் இதைப் பற்றியே பேச்சு...கார் கம்பெனிகள் தங்கள் கார்களை விற்க புதுப்புது உத்திகளைக் கையாள்கிறார்கள்.

இதயெல்லாம் பார்த்தால் அமெரிக்காவைவிடக் குறைந்த வருமானமும் அதிக பெட்ரோல் விலையும் இருக்கும் போதும் சராசரி இந்தியர்கள் அதிக சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்று தோன்றுகிறது .

இங்கு பெரும்பாலான விஷயங்கள் சாதாரணமாகவே விலை அதிகம் தான். கறிகாய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை விட இவர்கள் பெட்ரோல் விலைக்குப் போடும் கூச்சலை சில சமயங்களில் புரிந்து கொள்வது கடினமாகத்தான் உள்ளது... ஒரு காலன் பெட்ரோலும் பாலும் இங்கு கிட்டத்தட்ட ஒரே விலை தான்...
இந்தியாவில் ஒரு லிட்டர் பாலும்  பெட்ரோலும் கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்கும் நாளும் வந்தால் ஒரு வேளை எனக்கு அமெரிக்கர்களைப் புரிந்துகொள்வது சுலபமாகலாம்...