Thursday 12 March 2009

slumdog millionaire ஐ இன்னும் பார்க்காத பாவிகளின் பட்டியலில் என் பெயர் உள்ளது...
ஆனால் ஏ ஆர் ரகுமானைப் பாராட்டி ஒரு ஆங்கிலப் பதிவு எழுதியதன் மூலம் அந்தப் பாவத்திற்கு ஓரளவு பரிகாரம் செய்து விட்டேன் என்று நினைக்கிறேன்...(பரிகாரம் இங்கே )
சில நாட்களுக்கு முன்னர் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் ஒன்று ஒரு விமானச் சீட்டு முன்பதிவு செய்யும் வலைத் தளத்திலிருந்து ... "ச்லம்டாக் விலையில் மில்லியனேர் சேவை" என்ற வாக்கியத்தோடு ...
அடக் கஷ்டகாலமே...தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது...
எதைத் தின்னால் இவர்களுக்கெல்லாம் பித்தம் தெளியும் என்று தெரியவில்லை ... :)

Friday 6 March 2009

மகான், காந்தி மகான்...

ஒரு வழியாக காந்தியடிகள் உபயோகித்த பொருட்களை யார் வாங்குவது என்ற சர்ச்சைக்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டது ...

காந்தியின் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைத்து மண்ணைப் போட்டு மூடியவர்கள் இன்று அவரது கண்ணாடிக்கும் கப்பரைக்கும் உரிமை கொண்டாடி கூச்சல் போடுவதைக்கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை...

நியாயமாகத் தமக்கு சொந்தமான பொருட்களை ஒருவர் ஏலத்தில் விடலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... அது இந்தியாவுக்கு தான் சொந்தம், கொடுத்தே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்வதோ, விற்கக் கூடாது என்று தடுப்பதோ எந்த விதத்தில் நியாயம் என்று எனக்குப் புரியவில்லை...
சரி, அவை நமது சரித்திரச் சின்னங்கள் என்று வாதம் செய்தால், நமது நாடெங்கும் உள்ள மற்ற சரித்திர, கலாசார சின்னங்களைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை இல்லை ?
சுயநலமும் சொத்து சேர்ப்பதும் மட்டுமே முக்கியமென்று நினைப்போர் தன் கண்ணாடிக்குக் குரல் கொடுப்பதை காந்தியே விரும்ப மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்....

இதில் வேடிக்கை என்னவென்றால் மது ஒழிப்பை முக்கியமென்று நினைத்தவரின் பொருட்களை வாங்க கடைசியில் மதுபானம் விற்ற காசுதான் கைகொடுத்தது... ம்ம்ம் ...நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது ?

கமலின் 'காதலா காதலா' படத்தில் வரும் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.... "ரூபா நோட்டுல வாழுறாரு காந்தி... வாய் நிறைய ஜோரா புன்னகைய ஏந்தி..."