Monday 31 August 2015

இது ஒரு இடுகுறிப் பதிவு !


வலைப்பதிவு என்ற ஒரு விஷயத்தை நான் செய்யத் தொடங்கி ஏழு வருடங்களுக்கு  மேல்  ஆகிவிட்டது என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

இதில் சில நாட்களாக என்னை மிகவும் யோசிக்க வைத்த விஷயம், ஏன் நான் ஆங்கிலத்தில் எழுதும் அளவிற்கு தமிழில் எழுதவில்லை என்பது தான்.

ஆங்கிலத்திலும் இத்தனை வருடத்தில் உருப்படியாக  ஒன்றும் எழுதிக் குவித்துவிடவில்லை என்றாலும், குறைந்தபட்சம் பதிவுகளின் எண்ணிக்கையாவது தமிழை விட அதிகமாக உள்ளது.

மொழி என்பது ஒரு கருவி. நமது எண்ணங்களையும், சிந்தனையையும், பேச்சாலோ எழுத்தாலோ மற்றவரிடம் பகிர்ந்துகொள்ள ஒரு கருவி. அப்படி இருக்கையில், தாய் மொழியாக முதலிலிருந்து பழகிய ஒரு மொழியை விட, பின்னர் கற்ற ஒரு மொழியில் பேசுவதும், எழுதுவதும், ஏன் சிந்திப்பதுமே கூட எப்படி இன்னும் சுலபமாக, சரளமாக வருகிறது ?

இத்தனைக்கும் படிக்கும் திறன், எழுதும் திறன் இரண்டும், இரு மொழிகளிலும் என்னைப் பொறுத்தவரை ஒரே அளவில் இருப்பதாகத் தான் நினைக்கிறேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தினமும் படித்தாலும், எழுத்து என்பது பெரும்பாலும் ஆங்கிலம் என்றாகிவிட்டது.

யோசித்துப் பார்த்தால் தோன்றும் சில காரணங்கள் - இன்று நம் வட்டத்தில் இருக்கும் பலரோடும் நமக்கு இருக்கும் தொடர்பு கருவிகள் மூலமாகத் தான் அமைகிறது. கருவிகளில் ஆங்கிலம் தான் சுலபமாக, இயல்பாக பயன்படுத்தும் மொழியாகப் போய்விட்டது . (ரொம்ப நெருக்கமான நட்பு அல்லது உறவு வட்டத்தில் இருப்போரிடம் தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதுவதும் பழக்கமாகி விட்டது )

இன்னொரு முக்கியமான விஷயம், பேச்சுக்கும் எழுத்துக்கும் தமிழில் உள்ள வேறுபாடு. ஆங்கிலதில் மனது யோசிப்பதை எல்லாம் கை அப்படியே எழுதிக்கொண்டு போவது இயல்பாகிறது. அனால் தமிழில், மனதில் 'பேச்சுத் தமிழில்' தோன்றும் எண்ணங்களை 'எழுத்துத் தமிழில்' மாற்றித்  தான் வெளியிட வேண்டியுள்ளது. மூளையைப் பொறுத்தவரை, தமிழைத் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும் ஒரு கூடுதல் வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த நடைமுறை சிக்கலினால் தமிழில் எழுத மூளைக்குக் கூடுதல் நேரம் தேவைப்படுவதாக தோன்றுகிறது.

தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பேசுவது என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது . அதனால் மேலே சொன்னது போல் மூளை  இந்த ஆங்கில வார்த்தைகளை எல்லாம் தவிர்த்து, தமிழ்ச் சொற்களால் மாற்றி எழுதும் போது வேகம் இன்னும் குறைகிறது.

கூடுமானவரை எளிய தமிழில் எழுதும் பழக்கம் விட்டுபோகாமல் இருக்கவாவது அடிக்கடி எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்... எதைப் பற்றி எழுதுவது என்று தான் தெரியவில்லை :)  (நாம எதைப் பற்றி எழுதினாலும் எப்படியும் படிக்க ஆளில்லை.. அதனால் எதைப் பற்றி வேண்டுமானாலும் நம்ம அரை வேக்காட்டு அறிவை வைத்துக்கொண்டு தைரியமாய் எழுதலாம் என்பது ஒரு ஆறுதல் ! )


அது சரி, அது என்ன தலைப்பில் 'இடுகுறி' ? தமிழில் பெயர்ச்சொல் (noun) வகைகளில் இரண்டு, காரணப்பெயர் மற்றும் இடுகுறிப் பெயர்.
ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில்  வைக்கப்படுவது காரணப்பெயர்(உம் - நாலு கால்கள் இருப்பதால் நாற்காலி ) . எந்தக் காரணமும் இல்லாமல் வைக்கப்பட்டு, வழக்கத்தில் இருக்கும் பெயர்ச்சொற்கள் இடுகுறிப் பெயர்கள். அந்த மாதிரி இது எந்தக் காரணமும்  இல்லாமல், எழுத வேண்டும் என்பதற்காக எழுதிய பதிவு  - இடுகுறிப் பதிவு !



No comments: